Thursday, April 9, 2009

என் கடவுள்

திருவிழா நாளொன்றில்
தீபமேந்தி 
தெருவில் இறங்குகிறாய்..
தேர் பார்த்த மகிழ்ச்சியில் 
திரும்பி நடக்கிறது தென்றல்.
உன் திரும்புதலுக்காய் 
திரியாகிறது மனசு.

உன்னோடு 
பிரகாரம் சுற்றி வரும் 
மயில் பாவாடையும்..
மஞ்சள் நிற தாவணியும் 
உடன் பிறந்த அழகென 
ஒய்யாரம் காட்டி நிற்க 
உன் வருகையால் 
மூலஸ்தானமே 
முக்தி பெறுகிறது.

கண்களும் கைகளும் 
ஒருசேர..
கைகூப்பி 
கடவுளைத் தொழுகிறாய் 

நானும் தொழுகிறேன் 
உன் அப்பன் ஆத்தாளை..! 


வைகரைப் பொழுதுகள்




அந்த படித்துறையில் 
துள்ளு மீன்கள் 
கிள்ளிப்போகும் 
நீர் வளையங்களில் 
நெடு நேரமாய் 
தலை துவட்டும் 
நீள் வெண்ணிலவை 
குட்டுவைத்து 
குளம் இடிக்கும் 
அதே அத்திப்பழ மரத்தின் 
அடியினில்தான் 
அமர்ந்திருக்கிறேன் 
பழுத்த 
என் ரோமங்களை 
உன் நினைவுகளால் 
வருடியபடி..!

அகவாசல்




வாசல் தெளிக்கையில் 
கொஞ்சம் 
நிதானமாய் தெளி..,
இரவெல்லாம்..
உன்னோடு 
கனவுகளில் விழித்த அசதியில் 
வெளியே படுத்திருக்கலாம் 
என் நினைவுகள்..!