Thursday, April 9, 2009

என் கடவுள்

திருவிழா நாளொன்றில்
தீபமேந்தி 
தெருவில் இறங்குகிறாய்..
தேர் பார்த்த மகிழ்ச்சியில் 
திரும்பி நடக்கிறது தென்றல்.
உன் திரும்புதலுக்காய் 
திரியாகிறது மனசு.

உன்னோடு 
பிரகாரம் சுற்றி வரும் 
மயில் பாவாடையும்..
மஞ்சள் நிற தாவணியும் 
உடன் பிறந்த அழகென 
ஒய்யாரம் காட்டி நிற்க 
உன் வருகையால் 
மூலஸ்தானமே 
முக்தி பெறுகிறது.

கண்களும் கைகளும் 
ஒருசேர..
கைகூப்பி 
கடவுளைத் தொழுகிறாய் 

நானும் தொழுகிறேன் 
உன் அப்பன் ஆத்தாளை..! 


3 comments:

  1. நல்ல கலாச்சாரம்தான். அழகுப்பெண்ணின் பெற்றோர்களை வணங்குதல்.கவிஞருக்கு பாராட்டுதல்கள்.

    ReplyDelete
  2. அன்புமிக்க தோழர் யாழன் அவர்கட்கு,

    வலைதளம் தொடங்கியமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

    நேரமின்மை காரணமாக உடனடியாக உங்கள் வலைதளத்தைப் பார்த்து கருத்துகூற முடியாமல் போய்விட்டது.

    இன்னும் பல்வேறு சமூகம் சார்ந்த படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

    கலை என்பது உழைப்பிலிருந்துதான் பிறப்பெடுத்தது என்று கார்ல்மார்க்ஸ் அறுதியிடுகிறார்.

    உழைப்பின் வலியைப் பிரதிபலிப்பதிலிருந்துதான் அத்துனை கலைவடிவங்களும் உருவாகிவந்தன என்பது வரலாறு. உழைப்பின் வலி என்பது ஒரு சில தனிமனிதர்களின் வலியல்ல; சமூகத்தின் பெரும்பான்மையான மக்களின் வலி. அதனை சமூகத்தின் வலியென்று தனித்தே அடையாளப்படுத்தலாம்.

    கதை, கட்டுரை, கவிதை, பாடல், நாடகம், சினிமா, இன்னபிற... என்று நாம் உயர்த்திப்பிடிக்கும் கலைவடிவங்கள் அனைத்தும் நம் பாட்டனும் முப்பாட்டனும் அவனது முப்பாட்டனும்; தமது வியர்வையையும் இரத்தத்தையும் இறந்துபெற்ற உணர்ச்சிகளையும் சேர்த்து இழைத்து நமக்களித்த கொடை.

    சமூகம் சார்ந்து அவர்கள் நமக்குப் படைத்தளித்த கலைகள், இன்றைய சமூக இழிவுகளைத் தகர்த்தெறிய நாம் உறுதியோடு பற்றி நிற்கவேண்டிய பேராயுதங்கள்!

    மாறாக, கலை என்பது ஏதோ அழகியலின் மீதான வழிபாடு மட்டுமே என்பதுபோலவும், கவிதை என்பது காதலும் அதுசார்ந்த உயிரியல் உணர்வுகளையும் பிரதிபலிப்பதற்கு மட்டுமே என்பதாகவும் சுருக்கி வெட்டி மோசடியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிக் கலைகளை உள்வாங்குபவர்களை சமூக உணர்விலிருந்து அப்புறப்படுத்தி விலங்குணர்ச்சிக்குள் தள்ளிவிடுகிறது.

    எனவே, நம்முடைய கலைகள் சமூகரீதியான பிரச்சினைகளை மட்டுமே பேசவேண்டியுள்ளது, சமூக இழிவுகளை ஒழித்துக்கட்டுகின்ற ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தப்படவேண்டியுள்ளது. இது நம்முடைய கலைகளுக்குச் சொந்தக்காரர்களான நமது பாட்டன், முப்பாட்டன்களும்; நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் புறவயமான சூழல்களும் நம்முடைய கலை வெளிப்பாடுகளுக்கு அளித்திருக்கும் முன்நிபந்தனையாக உணர்வோம்.

    நம்முடைய கலைகள் இனி எப்போதும் சமூக இழிவுகளை வெட்டிவீழ்த்துகின்ற வாளாய்ச் சுழலட்டும்!

    தொடர்ந்து பேசுவோம்! நன்றி!!

    தோழமையுடன்,

    சுரேஷ்.
    மதுராந்தகம்.

    ReplyDelete
  3. arumai yaana kavithai
    rahini germany

    ReplyDelete